தர்மபுரி:
காலி பணியிடங்களை நிரப்பக்கோரி நில அளவை அலுவலர்கள் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்ணா போராட்டம்
தர்மபுரி மாவட்டத்தில் பணிபுரியும் நில அளவை அலுவலர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சங்க தர்மபுரி மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் பிரபு தர்ணா போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாநில செயலாளர் கல்பனா, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் பழனியம்மாள், மாவட்ட செயலாளர் சேகர், பொருளாளர் இளவேனில் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
கைவிட வேண்டும்
தர்மபுரி மாவட்டத்தில் நில அளவை சார்ந்த அனைத்து பணிகளை மேற்கொள்ளும் களப்பணியாளர்களின் பணி சுமையை குறைக்க வேண்டும். ஒட்டுமொத்த பணிகளை கருத்தில் கொள்ளாமல், உட்பிரிவு, பட்டா மாறுதல் பணியினை மட்டும் ஆய்வுக்கு எடுத்து கொள்ளும் போக்கினை கைவிட வேண்டும். நிலுவை மனுக்களை காரணம் காட்டி எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.
நில அளவர் முதல் கூடுதல் இயக்குனர் வரை உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். 4 உதவியாளர்களை காலமுறை ஊதியத்தில் நிரந்தரமாக பணியமர்த்த வேண்டும்.
மாவட்ட அளவில் நவீன மறு நில அளவை திட்ட பணிகளை தனி உதவி இயக்குனர் தலைமையில் ஏற்படுத்த வேண்டும். அனைத்து நாட்களிலும் புலம் சார்ந்த களப்பணிகளை மேற்கொள்வதால் உடல் சோர்வுக்கும், மனசோர்வுக்கும் உள்ளாக்கப்படும் களப்பணி அலுவலர்களுக்கு அரசு விடுமுறை நாட்களில் ஓய்வு அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.