பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஆண்டிப்பட்டி அருகே பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-02-01 17:19 GMT

ஆண்டிப்பட்டியை அடுத்த சக்கம்பட்டியில் உள்ள முத்துமாரியம்மன் அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் சிலர் பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதனை பார்த்து மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கிடையே மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த சம்பவம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பள்ளிக்கு நேரில் சென்று தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகளிடம் விசாரணை நடத்தினார்.

இந்தநிலையில் மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்ததாக தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று சக்கம்பட்டி அரசு பள்ளி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் காமாட்சி, தொகுதி செயலாளர் முத்துராமன், தொகுதி துணை செயலாளர் குழந்தைராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் முனீஸ்வரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இதில், 2 கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள், தலைமை ஆசிரியருக்கு எதிராக கோஷமிட்டபடி பள்ளிக்குள் நுழைய முயன்றனர். இருப்பினும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், அவர்களை நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்