அரூர் அருகே மயான பாதை ஆக்கிரமிப்பு: முதியவர் உடலுடன் கிராம மக்கள் போராட்டம்

Update: 2023-02-01 18:45 GMT

அரூர்:

அரூர் அருகே மயான பாதை ஆக்கிரமிக்கப்பட்டதை கண்டித்து முதியவர் உடலுடன் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயான பாதை ஆக்கிரமிப்பு

அரூரை அடுத்த கோபிசெட்டிப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அன்னாலம்பட்டியில் 100-க்கும் மேற்பட்ட அருந்ததியர் குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் இறந்தவர்களின் உடல்களை அந்த பகுதியில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்து வந்தனர். இந்தநிலையில் மயானத்துக்கு செல்லும் பாதையை சிலர் ஆக்கிரமித்து, அதை ஒற்றையடி பாதையாக மாற்றியதாக கூறப்படுகிறது.

இதனால் இறந்தவர்களின் உடல்களை மயானத்துக்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கிராம மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் எந்த வித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை.

போராட்டம்

இந்தநிலையில் கோபிசெட்டிப்பாளையத்தை சேர்ந்த கணபதி என்ற 80 வயது முதியவர் நேற்று முன்தினம் உடல்நலக்குறைவு காரணமாக பலியானார். அவரது உடலை மயானத்துக்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மாலை 3 மணிக்கு பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மயானத்தின் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் இரவு வரை நீடித்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் 3 மாதங்களில் மயானத்துக்கு செல்லும் பாதையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, சீரமைக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து இரவு 9.30 மணிக்கு கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் முதியவர் கணபதி உடலை மயானத்தில் அடக்கம் செய்தனர்.

மேலும் செய்திகள்