தர்மபுரி நகராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2023-01-10 18:45 GMT

தர்மபுரி:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

தர்மபுரி மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தர்மபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை தொழிலாளர்கள் சங்க இணை செயலாளர் பரணிகுமார் தலைமை தாங்கினார்.

சங்க இணை செயலாளர் செல்வம், சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாநில செயலாளர் நாகராஜன், மாவட்ட நிர்வாகி வெங்கட்ராமன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். தூய்மை பணி உள்ளிட்ட அடிப்படை பணிகளை அவுட்சோர்சிங் முறையில் தனியாரிடம் ஒப்படைக்கும் அரசாணை 152-ஐ திரும்ப பெற வேண்டும். தூய்மை பணியாளர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் அரசாணை 132-ஐ திரும்ப பெற வேண்டும்.

ஊக்கத்தொகை

தூய்மை பணியாளர்களுக்கு அரசாணைப்படி குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு அடிப்படை உரிமைகளான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தேவையான தளவாட பொருட்களை உடனடியாக வழங்க வேண்டும். முன்கள பணியாளர்களுக்கு அரசு அறிவித்த அரசாணைப்படி ஊக்கத் தொகையாக ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் 5-ந் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும்.

பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி வருகை பதிவேட்டை உடனே வழங்கி, அவர்களுடைய வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும். தொழிலாளர்களின் கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட போதும் 15 மாதங்களுக்கு மேலாக கட்டாமல் இருக்கும் கூட்டுறவு கடனை உடனே செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தூய்மை பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்