திண்டுக்கல், பழனியில் தலையில் முக்காடு போட்டு சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், பழனியில் தலையில் முக்காடு போட்டு சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-01-06 17:16 GMT

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் திண்டுக்கல் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கோட்ட தலைவர் ராஜா தலைமை தாங்கினார். செயலாளர் சீனிவாசன், மாநில துணை தலைவர் ராஜமாணிக்கம் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் கருப்பு நிற பிளாஸ்டிக் பைகளை முக்காடு போல் அணிந்து கொண்டு கலந்துகொண்டனர்.

மேலும் சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறை காலிப்பணியிடங்களை நிரப்புவதில் கிராமப்புற இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். சாலை பணியாளர்களுக்கு ஊதியத்தில் 10 சதவீதம் ஆபத்துபடி, நிரந்தர பயணப்படி, சீருடை, சலவை படி ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினர். முடிவில் கோட்ட பொருளாளர் முருகேசன் நன்றி கூறினார்.

இதேபோல் பழனி நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கோட்ட தலைவர் நந்தகோபால் தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர் மணிமாறன், பொருளாளர் வீரையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள் தலையில் முக்காடு போட்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்