தர்மபுரி:
அகில இந்திய பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் நலச்சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி பாரதிபுரம் பொது மேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முனியன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் வேடியப்பன், மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் வணங்காமுடி, நிர்வாகிகள் அசோகன், மாது, வெங்கடேசன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்களுக்கு 1-1-2017 முதல் 7-வது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் ஓய்வூதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும். கூடுதல் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.இதில் ஓய்வூதியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.