ஜெர்தலாவ் ஏரியை குத்தகைக்கு விடக்கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

Update: 2022-11-29 18:45 GMT

பாலக்கோடு:

பாலக்கோடு அருகே ஜெர்தலாவ் ஊராட்சி மணியகாரன் கொட்டாயில் 59 ஏக்கர் பரப்பளவில் ஜெர்தலாவ் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் மீன் பிடிப்பதை குத்தகைக்கு விடக்கோரி பாலக்கோடு தாலுகா அலுவலகத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தை 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திடீரென முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. முற்றுகையிட்ட கிராம மக்களுடன், உதவி பொறியாளர் வெங்கடேஸ்வரன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், ஏரியை கடந்த முறை ஏலம் எடுத்த நபர்கள் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதால், குத்தகை காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனால் மீன்பிடி குத்தகையை நிறுத்தி வைக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு கால அவகாசம் முடிவடைந்த பிறகு ஏரி முறையாக குத்தகை விட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றனர். 

மேலும் செய்திகள்