ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து 10 இடங்களில் மறியல்: போலீசார்-பொதுமக்கள் இடையே தள்ளு முள்ளு; பொதுப்பணித்துறை ஊழியரின் மண்டை உடைப்பு

ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து 10 இடங்களில் சாலை மறியல் நடந்தது. போராட்டத்தின்போது போலீசார்-பொதுமக்கள் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது பொதுப்பணித்துறை ஊழியரின் மண்டை உடைந்தது.

Update: 2022-10-27 19:30 GMT

ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து 10 இடங்களில் சாலை மறியல் நடந்தது. போராட்டத்தின்போது போலீசார்-பொதுமக்கள் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது பொதுப்பணித்துறை ஊழியரின் மண்டை உடைந்தது.

திருத்துறைப்பூண்டி அருகே நடந்த இந்த பரபரப்புசம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தலைக்காடு கண்ணன் மேடு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மூன்று தலைமுறைகளாக 100 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் பெரிய ஏரி இருந்ததாகவும், இது நீர்நிலை புறம்போக்கு எனவும், இங்கு ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள வீடுகளை காலி செய்ய வேண்டும் எனவும் அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த கோர்ட்டு நீர்நிலை புறம்போக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

தர்ணா-50 பேர் கைது

நேற்று திருத்துறைப்பூண்டி தாசில்தார் மலர்க்கொடி, முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தம், திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் மற்றும் அதிகாரிகள் பொக்லின் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக தலைக்காடு கண்ணன் மேடு பகுதிக்கு சென்றனர்.

அப்போது அங்கு இருந்த அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சிங்காரவேலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் காரல்மார்க்ஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய கவுன்சிலர் வேதரத்தினம், அ.தி.மு.க. மீனவர் அணி ஒன்றிய செயலாளர் வைண்ணா செந்தில் உள்ளிட்டோர் பொக்லின் எந்திரங்களை மறித்து வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அங்கு சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

இந்த நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து திருத்துறைப்பூண்டி மாரிமுத்து எம்.எல்.ஏ. தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில குழு உறுப்பினர் நாகராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் ஜோதிபாசு, இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் செல்வராஜ், பாமணி ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் பாமணியில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போலீசார்-பொதுமக்கள் இடையே தள்ளு முள்ளு

அங்கு சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இதனிடையே தலைக்காடு கண்ணன் மேடு பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறி 10-க்கும் மேற்பட்ட வீடுகள் வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணி துறையினரால் இடிக்கப்பட்டது.

பொதுப்பணித்துறை ஊழியர் மண்டை உடைந்தது

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ஆக்கிரமிப்பை அகற்ற வந்த பொக்லின் எந்திரத்தின் கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்தனர்.

அப்போது அங்கு பணியில் இருந்த பொதுப்பணித்துறை ஊழியர்(லஸ்கர்) செல்வம் என்பவரின் மண்டை உடைந்து காயம் ஏற்பட்டது. அவர் திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

10 இடங்களில்...

போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி திருத்துறைப்பூண்டியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க.வினரை முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்.எல்.ஏ. நேற்று மாலை நேரில் சந்தித்து பேசினார்.

இந்த நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் மணலி, விளக்குடி, கட்டிமேடு, உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருத்துறைப்பூண்டி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கோட்டூர்

ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோட்டூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் மன்னார்குடி-திருத்துறைப்பூண்டி சாலையில் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்