நாமக்கல்லில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல்:
காலை சிற்றுண்டியை சத்துணவு ஊழியர்களே சமைத்து வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் தங்கராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நடேசன், பொருளாளர் சாந்தி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். எரிவாயு சிலிண்டரை அரசே முழுமையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.