நாமக்கல், குமாரபாளையத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல், குமாரபாளையத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாமக்கல், குமாரபாளையத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெட்ரோல், டீசல்
விலைவாசி உயர்வை கண்டித்து நாமக்கல் பூங்கா சாலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. காங்கிரஸ் கட்சியின் நாமக்கல் மாவட்ட தலைவர் சித்திக் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர்கள் வீரப்பன், செல்வராஜ், பாச்சல் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் விலைவாசி உயர்வை கண்டித்தும், போதிய வேலைவாய்ப்பு இல்லாததை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியினர் கோஷமிட்டனர். மேலும் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
அதேபோல் ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் பல்வேறு குளறுபடிகள் நடந்து இருப்பதாகவும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என கூறினர். இதில் நாமகிரிப்பேட்டை முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் புள்ளியப்பன், நகர தலைவர்கள் மோகன், முரளி, ஓ.பி.சி. பிரிவு மாநில துணைத்தலைவர் டாக்டர் செந்தில், மாநில மகளிர் காங்கிரஸ் துணை செயலாளர் மகேஷ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனிடையே விலைவாசி உயர்வு குறித்த மானிய கோரிக்கையில் ஜோதிமணி எம்.பி.யின் பேச்சு தொடர்பான துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.
குமாரபாளையம்
குமாரபாளையம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜானகிராமன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்தும், விலைவாசி உயர்வை குறைக்ககோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கட்சி நிர்வாகிகள் தங்கராஜ், சுப்பிரமணியம், மனோகரன், கோகுல், சிவராஜ், சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.