விழுப்புரத்தில் கட்டிட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் கட்டிட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Update: 2022-06-22 17:03 GMT


விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே தமிழக கட்டிட தொழிலாளர்கள் பொதுநல மத்திய முன்னேற்ற சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் நெல்லை மகாலிங்கம் தலைமை தாங்கினார். தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேட்டவலம் மணிகண்டன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

கட்டுமான தொழிலாளர் சங்க மாநில பொருளாளர் ஆறுமுகம், அமைப்புசாரா தொழிலாளர் சங்க மாநில துணைத்தலைவர் முனுசாமி, கட்டுமான தொழிலாளர் சங்க மாநில துணைத்தலைவர் பழனிமகாராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில மகளிரணி செயலாளர் கோமதி வரவேற்றார்.

கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும், தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கு அவர்கள் சார்ந்த தொழில் கருவிகள் வாங்க மானிய அடிப்படையில் கடனுதவி வழங்க வேண்டும், நலவாரியம் வழங்கும் திருமண உதவித்தொகை ஆண், பெண் என வித்தியாசம் இன்றி அனைவருக்கும் ரூ.50 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் மாநில சட்ட ஆலோசகர் சக்திவேல், கோரிக்கைகளை வாசித்தார். கட்டுமான தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் பழனிச்சாமி, அமைப்புசாரா தொழிலாளர் சங்க மாநில பொருளாளர் பேச்சியப்பன், மாநில கவுரவ ஆலோசகர் சீத்தாபதி, மகளிரணி அமைப்பாளர் மகேஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

முடிவில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா புதுச்சேரி மாநில தலைவர் அருணாச்சலம், ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்