சம்பள உயர்வு கேட்டு இன்சூரன்ஸ் ஊழியர்கள் பணி புறக்கணிப்பு
திண்டுக்கல்லில் சம்பள உயர்வு கேட்டு பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொது இன்சூரன்ஸ் ஊழியர்களுக்கு 5 ஆண்டுகளாக சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. எனவே சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிடவேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 20-ந்தேதி முதல் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இதற்கிடையே அந்த கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டத்தில் பொது இன்சூரன்ஸ் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஒரு மணி நேரம் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட கிளைகளில் மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை ஒரு மணி நேரம் ஊழியர்கள் பணியை புறக்கணித்து அலுவலகத்தை விட்டு வெளியே சென்றனர். இதனால் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் ஒரு மணி நேரம் பணிகள் பாதிக்கப்பட்டன.
இந்தநிலையில் திண்டுக்கல் நியு இந்தியா அசூரன்ஸ் கிளை அலுவலகம் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு யுனைடெட் இந்தியா அதிகாரிகள் சங்க தலைவர் சுப்புராஜ் தலைமை தாங்கினார். நேசனல் இன்சூரன்ஸ் அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாகி அரவிந்தன், நியு இந்தியா இன்சூரன்ஸ் அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாகி கோவிந்தராஜ், முதுநிலை கோட்ட மேலாளர் ரவிசந்திரன், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பெரியசாமி, பொருளாளர் கவுதமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.