சிப்காட் அமைப்பதை கைவிடகோரிவிவசாயிகள் 12 மணி நேர காத்திருப்பு போராட்டம்

Update: 2023-07-22 19:00 GMT

மோகனூர்:

மோகனூர் அருகே வளையப்பட்டி, அரூர், பரளி, என்.புதுப்பட்டி, லத்துவாடி உள்ளிட்ட கிராமங்களில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க நில அளவீடு செய்யும் பணி நடந்து வருகிறது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, சிப்காட் எதிர்ப்பு இயக்கம் என்ற அமைப்பை தொடங்கினர். இந்த அமைப்பு சார்பில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

ஆனால் இதுவரை அரசிடம் இருந்து இதற்கான அறிவிப்பு வரவில்லை. சிப்காட் அமைப்பதற்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்த நிலையில் நேற்று வளையப்பட்டியில் மாலை 6 முதல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி வரை 12 மணி நேரம் கண்விழித்து காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு விவசாயிகள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். சிப்காட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் ராம்குமார், பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பா.ஜனதா ஒன்றிய தலைவர் செல்வமணி, கொ.ம.தே.க. ஒன்றிய செயலாளர் சிவக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், பா.ம.க. நிர்வாகி வெற்றி உள்பட பலர் பங்கேற்று விடியவிடிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்