தேசியக் கொடியை கண் இமைப்போல பாதுகாக்க வேண்டும் - கண் விழிக்குள் தேசியக்கொடி வரைந்த நகை தொழிலாளி
இளைஞர்கள் நமது தேசத்தையும், தேசியக் கொடியையும் கண் இமைப்போல பாதுகாக்க வேண்டும் என்பதற்காக கண் விழிக்குள் தேசியக்கொடி நகை தொழிலாளி வரைந்துள்ளார்.;
கோவை,
நாட்டின் 75-வது சுதந்திர தின விழா வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த ராஜா என்ற நகை தொழிலாளி தனது கண் விழியில் தேசியக் கொடி வரைந்து சாதனை படைத்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
நம் நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரர்கள், தியாகிகளை கவுரவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்திற்கு புதுமையான முயற்சிகளில் ஈடுபடுவேன்.
இந்த ஆண்டு 75-வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளோம். இளைஞர்கள் நமது தேசத்தையும், தேசிய கொடியையும் கண் இமைப்போல பாதுகாக்க வேண்டும் என்பதற்காக கண் விழிக்குள் தேசியக்கொடி வரையும் முயற்சியில் இறங்கினேன். அதன்படி முட்டையின் உள்பகுதியில் வெள்ளை கருவிற்கும், முட்டை ஓட்டிற்கும் இடையே காணப்படும் மெல்லிய படலத்தை பிரித்து எடுத்து அதில் தேசியக் கொடியை வரைந்து அதனை கண் விழிப்பகுதியில் வைத்துள்ளேன். இவ்வாறு செய்வதால் கண் விழிக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாது.
இந்த சிறிய அளவிலான தேசியக் கொடியை கண்ணுக்குள் பொருத்துவது மிகவும் கடினம். கொடி மிகவும் மெல்லியதாக உள்ளதால் கண்ணுக்குள் பொருத்தும் போது கண்களை வேகமாக சிமிட்டினாலோ அல்லது கண்களில் இருந்து நீர் வடிந்தாலோ கொடி கரைந்து விடும்.
இதனால் பல மணி நேர முயற்சிக்கு பின் வெற்றிகரமாக இந்த கொடியை நான் 2 கண்களுக்குள் பொருத்தி உள்ளேன். மேலும் 300 மில்லி கிராம் தங்கத்தை தீக்குச்சி அளவை விட சிறியதாக தங்கத்தை பயன்படுத்தி ஒரு வீட்டின் அருகே இளைஞர் ஒருவர் தேசிய கொடியை தாங்கி நிற்பது போல வடிவமைத்துள்ளேன். எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் நாம் தேசத்தையும், தேசத்திற்காக பாடுபட்டவர்களையும் போற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.