வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம்; 6 பேர் கைது
திண்டுக்கல் புறநகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம் நடந்தது. இது தொடர்பாக புரோக்கர்கள் 6 பேரை போலீசார் கைது செய்தனர். 3 பெண்கள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.
ஆட்டோ டிரைவருக்கு அழைப்பு
திண்டுக்கல் அருகே உள்ள பெருமாள் கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 35). ஆட்டோ டிரைவர். நேற்று முன்தினம் இரவு இவர், திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி பொன்னி நகர் பகுதிக்கு பயணிகளை ஏற்றி சென்றார்.
பின்னர் அவர்களை இறக்கி விட்டு அந்த வழியாக ஆட்டோவில் வந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு பெண் உள்பட 6 பேர் சீனிவாசனிடம் பேச்சு கொடுத்தனர்.
அப்போது தங்களிடம் 30 முதல் 40 வயது மதிக்கத்தக்க பெண்கள் இருப்பதாகவும், ரூ.1500 கொடுத்தால் அவர்களிடம் உல்லாசமாக இருக்கலாம் என்று வற்புறுத்தி விபசாரத்துக்கு அழைத்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சீனிவாசன், மறுப்பு தெரிவித்து அங்கிருந்து வந்து விட்டார். பின்னர் அவர், இது தொடர்பாக தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்துக்கு சென்று அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரனிடம் புகார் அளித்தார்.
புரோக்கர்கள் கைது
இதனையடுத்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுவின் தனிப்படை போலீசார் செட்டிநாயக்கன்பட்டி பொன்னி நகர் பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கு ஆண்களை விபசாரத்துக்கு அழைத்து கொண்டிருந்த 3 பெண்கள் மற்றும் புரோக்கர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் வண்டல் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன், திண்டுக்கல் ராஜக்காபட்டியை சேர்ந்த சண்முகம், சாணார்பட்டியை சேர்ந்த சுரேஷ், திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த மரிய ஸ்டாலின் பாண்டி என்று தெரியவந்தது.
வாடகைக்கு வீடுகளை எடுத்து பெண்களை வைத்து விபசாரம் செய்யும் புரோக்கர்களாக செயல்பட்டுள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர்.
காப்பகத்தில் சேர்ப்பு
இதேபோல் பிடிபட்ட 3 பெண்கள் தாடிக்கொம்பு, மானாமதுரை, கோவை சோமனூர் பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களுக்கு போலீசார் அறிவுரை கூறி, திண்டுக்கல் பாரதிபுரத்தில் உள்ள பெண்கள் காப்பகத்தில் சேர்த்தனர்.
இதற்கிடையே இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரை போலீசார் தேடி வந்தனர். இதில் திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த ஸ்டீபன் ராஜ் (30), அருண் (36) ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதேபோல் வீடுகளை வாடகைக்கு எடுத்து இதுபோன்று மேலும் சிலர் விபசாரத்தில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது. இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.