பாலத்துக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து விவசாயி பலி:அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு
மோகனூரில் பாலத்துக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து விவசாயி பலியான சம்பவம் குறித்து அதிகாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மோகனூர்
நாமக்கல் அடுத்த என்.புதுப்பட்டி அருகே நாமக்கல்-திருச்சி சாலையை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகின்றது. கடந்த 21-ந் தேதி நாமக்கல் மாவட்டம் எர்ணாபுரம் அருகே உள்ள ரங்கப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த விவசாயி ரமேஷ் (வயது45) என்பவர் கரூர் மாவட்டம் புலியூரில் இருந்து வளையப்பட்டி வழியாக நாமக்கல்லுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது மோகனூர் அருகே வந்தபோது சாலை விரிவாக்க திட்டத்தில் பாலம் கட்டும் பணி நடந்த இடத்தில் பாலத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. பின்னர் அவர் பாலத்துக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்தநிலையில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெறும்போது பொதுமக்களுக்கு தெரியும் வகையில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். ஆனால் உரிய பாதுகாப்பின்றி பணி செய்த மதுரையை சேர்ந்த ஒப்பந்ததாரர் தேவானந்த், மேலாளர் பாலகிருஷ்ணன், மேற்பார்வையாளர் வினோத்குமார் உள்ளிட்ட 3 பேர் மீதும் மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். மேலும் இதுகுறித்து உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்காத துறை அலுவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவும் விசாரணை செய்து வருகின்றார்கள்.