மாணவ-மாணவிகளுக்கு இலவச என்ஜினீயரிங் படிப்புக்கான சான்று
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் ஏழை எளிய மாணவ-மாணவிகளுக்கு இலவச என்ஜினீயரிங் படிப்புக்கான சான்றை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. வழங்கினார்.
ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினராக ஊர்வசி செல்வராஜ் இருந்தபோது, கடந்த 2006-ம் ஆண்டு முதல் தமது சட்டமன்ற தொகுதியில் உள்ள ஏழை, எளிய மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் சென்னையில் உள்ள தமக்கு சொந்தமான கிங்ஸ் என்ஜினீயரிங் கல்லூரியில் ஆண்டுதோறும் இலவச கல்வி வழங்கிட ஏதுவாக அதற்கான இலவச என்ஜினீயரிங் கல்வி திட்டத்தை நடைமுறைப்படுத்தி செயல்படுத்தி வந்தார். இதன்படி, 12-ம் வகுப்பு முடித்த மாணவ-மாணவிகளில் 10 பேருக்கு 2006-ம் ஆண்டு முதல் இலவசமாக என்ஜினீயரிங் கல்வி வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், ஊர்வசி செல்வராஜ் மறைவுக்கு பின்னர் தொடர்ந்து இலவச என்ஜினீயரிங் கல்வி வாய்ப்பு அவரது மகனான ஊர்வசி அமிர்தராஜ் மூலமாக ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு உட்பட்ட மாணவர்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது. ஊர்வசி அமிர்தராஜ் கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனவுடன் தனது தேர்தல் வாக்குறுதிப்படி ஆண்டுதோறும் 25 மாணவ-மாணவிகளுக்கு இலவச என்ஜினீயரிங் கல்வி வாய்ப்பினை வழங்குவதுடன் 100 பேருக்கு சலுகை கட்டணத்திலும் கல்வி வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு 12-ம் வகுப்பு முடித்த மாணவ-மாணவிகளுக்கு இலவச என்ஜினீயரிங் கல்விக்கான சான்று வழங்கும் விழா சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஊர்வசிஅமிர்தராஜ் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இலவச என்ஜினீயரிங் கல்வி பயில்வதற்காக சான்றை வழங்கினார். இதில், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, எம்.எல்.ஏ.வின் நேர்முக உதவியாளர் சந்திரபோஸ், மாவட்ட பொதுச்செயலாளர் சீனிராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் எடிசன், சட்டமன்ற தொகுதி இளைஞரணி தலைவர் பிலஷ்வின், வட்டாரத்தலைவர்கள் நல்லகண்ணு, கோதண்டராமன், புங்கன், ஐ.என்.டி.யூ.சி. பொறுப்பாளர் சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.