மாணவர்களின் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை- முதன்மை கல்வி அலுவலர் தகவல்

மாணவர்களின் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.

Update: 2022-10-27 19:00 GMT

பெரம்பலூர் மாவட்ட பள்ளி முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் கூறுகையில், தமிழக அரசின் உத்தரவின்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 'மாணவர் மனசு பெட்டி' என்ற புகார் பெட்டி தலைமை ஆசிரியர் அறைக்கு அருகே மாணவ-மாணவிகளின் எளிதில் பார்க்கக்கூடிய வகையில் வைக்கப்பட்டுள்ளன. அதில் பள்ளியில் ஏற்படும் பிரச்சினைகளை மாணவ-மாணவிகள் புகார்களாக எழுதி போடலாம். புகார் தெரிவிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்பட்டு வருகிறது. புகார் தெரிவிப்பவர் தங்களுடைய பெயர்-விவரங்களை கூட எழுத வேண்டாம். 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்டியை மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு, அதில் இருக்கும் புகார்கள் மீது உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பள்ளி வளாகங்களில் மாணவ-மாணவிகளுக்கு பாதுகாப்புக்கு சில யோசனைகள் என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய சுவரொட்டியும் ஒட்டப்பட்டும், பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், பொது இடங்களில் பாலியல் சீண்டல்கள், தொந்தரவுகளால் பாதிக்கப்படும் மாணவ-மாணவிகள் பள்ளிக்கல்வித்துறையின் 14417 என்ற 24 மணி நேர கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம். அந்த உதவி எண்ணும் மாணவர் மனசு பெட்டியில் எழுதப்பட்டுள்ளது. மாணவர் மனசு பெட்டி மாணவ-மாணவர்கள் அச்சமின்றி தங்களது குறைகளை தெரிவிக்க வாய்ப்பாக உள்ளது. நான் ஆய்வின் போது கூட மாணவர் மனசு பெட்டியை கண்காணித்து வருகிறேன். மேலும் மாணவ-மாணவிகள் பள்ளிகளில் தங்களுக்கு ஏற்படும் குறைகளை மட்டுமின்றி, நிறைகளையும் எழுதி பெட்டியில் போடலாம். மேலும் மாணவர் மனசு பெட்டியை வைத்து முறையாக பின்பற்றாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்