ரூ.5.20 கோடியில் திட்டப்பணிகள்
தர்மபுரி நகரில் ரூ.5.20 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் மேற்கொள்ள நகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தர்மபுரி நகரில் ரூ.5.20 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் மேற்கொள்ள நகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
நகராட்சி கூட்டம்
தர்மபுரி நகராட்சி கூட்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமை தாங்கினார். துணைத்தலைவர் நித்யா அன்பழகன் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார் வரவேற்றார். இதில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசுகையில், தர்மபுரி நகராட்சி பகுதியில் ஆங்காங்கே தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும். தர்மபுரி புறநகர் பஸ் நிலையத்தில் ஓட்டு கட்டிடத்தில் இயங்கும் கடைகளை கான்கிரீட் கடைகளாக மாற்ற வேண்டும். தர்மபுரி நகரில் உள்ள பெரும்பாலான தெருவிளக்குகள் எரியாமல் உள்ளது. இதனை உடனடியாக சீரமைக்க வேண்டும். டெண்டர் விடப்பட்டு நிலுவையில் உள்ள சாலை மற்றும் சாக்கடை கால்வாய்கள் அமைக்கும் பணி உள்ளிட்ட திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு தலைவர், ஆணையாளர் மற்றும் நகராட்சி பொறியாளர் ஜெயசீலன், நகரமைப்பு அலுவலர் ஜெயவர்மன், நகராட்சி சுகாதார அலுவலர் ராஜரத்தினம், துப்புரவு ஆய்வாளர்கள் கோவிந்தராஜன், சுசீந்திரன், சீனிவாசலு, வருவாய் ஆய்வாளர் மாதையன் உள்ளிட்ட அலுவலர்கள் கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்து பேசினார்.
எரிவாயு தகன மேடை
இந்த கூட்டத்தில் தர்மபுரி குமாரசாமிப்பேட்டை, மதிகோன்பாளையம், கோட்டை, சந்தைப்பேட்டை, அன்னசாகரம், விவேகானந்தா டவுன்ஹால், அப்பாவு நகர், எஸ்.வி. ரோடு, பி.ஆர். சுந்தரம் தெரு, காமாட்சி அம்மன் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள நகராட்சி பள்ளிகளில் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பில் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். குமாரசாமிப்பேட்டை அரிச்சந்திரன் மயானத்தில் எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி, நகராட்சி அலுவலகத்தில் லிப்ட் வசதி, தெருக்களில் குப்பைகளை சேகரிக்கும் பணிக்காக 12 பேட்டரி வாகனங்கள் வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்தில் நகராட்சி நிர்வாக செலவினங்கள் உள்பட மொத்தம் ரூ.5 கோடியே 20 லட்சம் மதிப்புள்ள திட்டப்பணிகளுக்கு நகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.