ரூ.5.84 கோடியில் திட்டப்பணிகள்

தர்மபுரி நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரூ.5.84 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை நகராட்சி மண்டல செயற்பொறியாளர் ராஜேந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2022-08-28 16:10 GMT

தர்மபுரி நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரூ.5.84 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை நகராட்சி மண்டல செயற்பொறியாளர் ராஜேந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திட்டப்பணிகள்

தர்மபுரி நகரில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.5.84 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சந்தைப்பேட்டை வளாகத்தில் ரூ.2.50 கோடி மதிப்பில் அறிவுசார் மையம், ரூ.49 லட்சம் மதிப்பில் சந்தை மேம்பாடு செய்தல், சந்தைப்பேட்டை நகர் நல மையத்தின் முதல் மாடியில் ரூ.40 லட்சம் மதிப்பில் கூடுதல் கட்டிடங்கள், தர்மபுரி குமாரசாமிப்பேட்டை அரிச்சந்திரன் மயானத்தில் ரூ.1.45 கோடி மதிப்பில் எரிவாயு தகடு மேடை ஆகிய திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதேபோன்று தர்மபுரி ஏ.எஸ்.டி.சி. நகரில் ரூ.75 லட்சம் மதிப்பில் பசுமை பூங்கா, அன்னசாகரத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் சுகாதார மையம் ஆகிய திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நகராட்சிகளின் மண்டல செயற்பொறியாளர் ராஜேந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த பணிகளை தரமானதாகவும், குறிப்பிட்ட காலத்துக்குள்ளும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

வணிக வளாகம்

இதேபோன்று தர்மபுரி முகமது அலி கிளப் ரோட்டில் தனியார் பங்களிப்புடன் ரூ.5 கோடி மதிப்பில் வணிக வளாகம் கட்டும் பணியை மண்டல செயற்பொறியாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் தர்மபுரி நகரில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் சாலை பணிகள் மற்றும் கால்வாய் அமைக்கும் பணிகளை அவர் பார்வையிட்டார்.

இந்த ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார், நகராட்சி பொறியாளர் ஜெயசீலன், நகரமைப்பு அலுவலர் ஜெயவர்மன், உதவி பொறியாளர் தவமணி மற்றும் நகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்