நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.410 கோடியில் 2 திட்டப்பணிகள் அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்

நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.410 கோடி மதிப்பீட்டில் முதல்-அமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2 திட்டப்பணிகளை அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

Update: 2022-06-19 16:54 GMT

தர்மபுரி:

நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.410 கோடி மதிப்பீட்டில் முதல்-அமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2 திட்டப்பணிகளை அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

திட்டப்பணிகள்

தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை சார்பில் முதல்-அமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தர்மபுரி-அரூர் வழி மொரப்பூர் சாலை வரை இருவழி பாதையை4 வழிப்பாதையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்யும் பணி ரூ.313.50 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதே போன்று திருவண்ணாமலை-அரூர் வழி தானிப்பாடி சாலை வரை இருவழி பாதையை 4 வழிப்பாதையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்யும் பணி ரூ.96.50 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த 2 திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா அரூர் ஒன்றியம் தீர்த்தமலை ஊராட்சியில் நடைபெற்றது.

விழாவுக்கு தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். கலெக்டர் சாந்தி வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தடங்கம் சுப்பிரமணி, இன்பசேகரன், முன்னாள் எம்.பி. எம்.ஜி.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தமிழக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு 2 சாலை திட்டப்பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

ரூ.6 லட்சம் கோடி கடன்

முதல்-அமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாவட்ட தலைநகரங்களை இணைக்கும் வகையில் மாநில நெடுஞ்சாலைகளை இருவழிப் பாதையில் இருந்து 4 வழிப்பாதைகளாக அகலப்படுத்தி மேம்பாடு செய்யும் திட்டத்தில் தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களை இணைக்கும் வகையில் 48.40 கிலோமீட்டர் நீளத்திற்கு 2 வழி சாலைகள் 4 வழி சாலைகளாக அமைக்கும் பணிகள் ரூ.410 கோடி திட்ட மதிப்பீட்டில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தர்மபுரியில் இருந்து தற்போது திருவண்ணாமலைக்கு அதிக நேரம் பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த 4 வழிச்சாலைகள் அமைக்கப்பட்டால் சுமார் ஒரு மணி நேரத்தில் திருவண்ணாமலைக்கு செல்ல முடியும். தரமான சாலைகள் அமைப்பதன் மூலம் பொதுமக்களின் பயணங்கள் சிறப்பாக அமையும். தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அரசின் மூலதனமாக செயல்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த அரசு ரூ.6 லட்சம் கோடிக்கு மேல் கடனை வைத்து விட்டு சென்றுவிட்டது. இதனால் உலக வங்கி உள்ளிட்ட வங்கிகள் மூலம் நிதி உதவிகள் பெறப்பட்டு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

நகைக்கடன் தள்ளுபடி

விழாவில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசுகையில், முதல்-அமைச்சர் மக்களுக்கான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகி்றார். மகளிர் இலவச பஸ் பயணத்திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களால் மக்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். கடந்த ஆட்சியாளர்கள் நகைக்கடன் தள்ளுபடி என வெறும் அறிவிப்பை மட்டுமே வெளியிட்டனர். ஆனால் நமது முதல்-அமைச்சர் நகைக்கடன்களை தள்ளுபடி செய்துள்ளார். திட்டங்களை அறிவிப்பு செய்வதோடு நிறுத்தாமல் அதனை முழுமையாக நிறைவேற்றி வருகிறார் என்று கூறினார்.

விழாவில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சூடப்பட்டி சுப்பிரமணி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் யசோதா மதிவாணன், நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் சந்திரசேகரன், தேசிய நெடுஞ்சாலைகள் துறை தலைமை பொறியாளர் பாலமுருகன், உதவி கலெக்டர் விஸ்வநாதன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் சரளா, தீர்த்தமலை ஊராட்சி மன்ற தலைவர் கலைவாணி, நெடுஞ்சாலைத்துறை சேலம் கண்காணிப்பு பொறியாளர் சுரேஷ், தர்மபுரி கோட்ட பொறியாளர் தனசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்