கோவில்களை கண்டறியும் குழுவில் உறுப்பினரை நியமித்ததற்கு தடை -ஐகோர்ட்டு உத்தரவு
ஆகம விதிகளின்படி கட்டப்பட்டுள்ள கோவில்களை கண்டறியும் குழுவில் அறநிலையத்துறை ஆலோசனை குழு உறுப்பினர் சத்தியவேல் முருகனாரை நியமித்ததற்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் அர்ச்சகர்களை நியமிப்பது தொடர்பாக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஆகம விதிகளின் படிதான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்றும், ஆகம விதிகளின்படி தமிழ்நாட்டில் கட்டப்பட்டுள்ள கோவில்களை கண்டறிய ஐகோர்ட்டு ஒய்வுபெற்ற நீதிபதி எம்.சொக்கலிங்கம் தலைமையில் 5 பேர் குழுவை நியமித்தும், இந்த குழுவில் குழுவின் தலைவர் ஒப்புதலுடன் மேலும் 2 உறுப்பினர்களை அரசு நியமிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்தநிலையில், இந்த குழுவில், அறநிலையத்துறை உயர்மட்ட ஆலோசனை குழு உறுப்பினர் சத்தியவேல் முருகனார் என்பவரை நியமித்து கடந்த 8-ந் தேதி அரசு உத்தரவிட்டது.
ரத்து
இந்த உத்தரவை எதிர்த்து அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அதில், "ஓய்வுபெற்ற நீதிபதியுடன் கலந்து ஆலோசித்து குழு உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என்ற ஐகோர்ட்டு உத்தரவு காற்றில் பறக்கவிடப்பட்டு உள்ளது. சத்தியவேல் முருகனார் நியமனம் நடந்துள்ளது. குழு தலைவரிடம் ஆலோசனை ஏதும் நடத்தப்படவில்லை. எனவே, குழுவில் இவரை நியமித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்'' என்று கூறப்பட்டு இருந்தது.
இடைக்கால தடை
இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோவில் ஆகமத்தை கண்டறிய அமைக்கப்பட்டுள்ள குழுவில் சத்தியவேல் முருகனாரை நியமித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர். மேலும், மனுவுக்கு 4 வாரங்களில் பதில் அளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கும், அறநிலையத்துறைக்கும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.