பேளுக்குறிச்சி மாரியம்மன் கோவிலில் வழிபாடு நடத்த தடை
இரு சமூகத்தினர் மோதலை தவிர்க்க பேளுக்குறிச்சி மாரியம்மன் கோவிலில் வழிபாடு நடத்த தடை விதித்து உதவி கலெக்டர் உத்தரவிட்டார்.
சேந்தமங்கலம்
சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பேளுக்குறிச்சி ஊராட்சியில் உள்ளது விநாயகர் மற்றும் மாரியம்மன் கோவில். அந்தகோவிலில் வழிபாடு செய்வது தொடர்பாக இரு சமூகத்தினர் இடையே சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரச்சினை ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் அந்தக் கோவிலுக்கு வழிபாடு செய்ய வராமல் இருந்து வந்தனர். இந்தநிலையில் சமீபத்தில் அவர்கள் இன்று (திங்கட்கிழமை) கோவிலில் நுழையும் போராட்டம் அறிவித்திருந்தனர். இதை அறிந்த கோவில் நிர்வாகிகள் சிலர் பேளுக்குறிச்சி போலீசில் கோவிலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டி புகார் கொடுத்தனர். அதைதொடர்ந்து நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் தலைமையில் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சமீபத்தில் அந்த இரு சமூகத்தினரிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அந்த கோவிலில் ஏற்கனவே என்ன நடைமுறையோ அதுவே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர். மேலும் நாமக்கல் உதவி கலெக்டர் பிரபாகரன் நேற்று சேந்தமங்கலம் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பினை கருதி பேளுக்குறிச்சி மாரியம்மன் மற்றும் விநாயகர் கோவிலுக்குள் வருகிற 17-ந் தேதி வரை பொதுமக்கள் உள்பட யாரும் நுழையக்கூடாது என்றும், கோவிலில் பூஜைகள் செய்ய பூசாரிக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் கோவிலுக்கு பாதுகாப்பு கேட்டு புகார் கொடுத்திருப்பதால் கோவிலை சுற்றியும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.