பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நோட்டீசுக்கு தடை

கோவில் திருவிழாவில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நோட்டீசுக்கு தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Update: 2023-05-12 20:08 GMT

கோவில் திருவிழாவில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நோட்டீசுக்கு தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

வெண்குடை திருவிழா

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தேவேந்திரகுல வேளாளர் சித்திரை வெண்குடை திருவிழா கமிட்டி பொருளாளர் பொன்னுசாமி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

எங்கள் சமூகத்தின் சார்பில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் சித்திரை வெண்குடை திருவிழா நடத்தப்படும். 336-வது ஆண்டாக இந்தாண்டுக்கான விழா கடந்த மாதம் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தரப்பில் எங்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

அதில், வெண்குடை திருவிழா நடந்த 2 நாட்களுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினருக்கான பாதுகாப்பு கட்டணமாக ரூ.66 லட்சத்து 91 ஆயிரத்து 276- ஐ அரசு வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்த நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

நோட்டீசுக்கு தடை

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, விழாக் காலங்களில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் விதமாக தேவையான கூடுதல் பாதுகாப்பை வழங்க வேண்டியது போலீசாரின் பணி. ஆனால் போலீசாரின் பாதுகாப்பு பணிக்காக கட்டணம் செலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியது ஏற்புடையதல்ல. அந்த நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் என்றனர்.

விசாரணை முடிவில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அனுப்பிய நோட்டீசுக்கு தடைவிதிக்கப்படுகிறது. இந்த வழக்கு குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பதில் அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்