பொள்ளாச்சியில் முன்னேற்பாடுகள் தீவிரம்-மாரியம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்

பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெறுகிறது.

Update: 2023-01-26 18:45 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெறுகிறது.

கும்பாபிஷேகம்

பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2005-ம் ஆண்டு கும்பாபிஷேகம் விழா நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து 17 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டது. இதையடுத்து விமான பாலாலயம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. பழமை வாய்ந்த விமான கோபுரத்துக்கும், சிற்பங்களுக்கும் வர்ணம் பூசி புதுப்பொலிவுடன் மாற்றப்பட்டன.

கடந்த மாதம் 12-ந்தேதி யாக சாலை அமைக்கும் பணிக்கு கால்கோள்நடப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 23-ந்தேதி முதல் கும்பாபிஷேக விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று காலை 8.30 மணிக்கு 2-ம் கால யாக பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பின்னர் மாலை 5.30 மணிக்கு 3-ம் கால யாக பூஜை நடைபெற்றது.

தபால் தலை வெளியீடு

முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.45 மணிக்கு ராஜகோபுரம், மாரியம்மன் விமான கோபுர மகா கும்பாபிஷேகமும், காலை 9.55 மணிக்கு விநாயகர், முருகன், அங்காளயம்மன் மற்றும் அன்னை மாரியம்மன் மூலாலய மகா கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது. மேலும் கும்பாபிஷேக விழாவையொட்டி இன்று சிறப்பு தபால் தலை வெளியிடப்படுகிறது. கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

இதையொட்டி பொள்ளாச்சி நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் போலீசார் தற்காலிக சோதனை சாவடி அமைத்து கண்காணித்து வருகின்றனர். கும்பாபிஷேக விழாவையொட்டி பொள்ளாச்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்