பாரிமன்னர் வேட்டைக்கு சென்று திரும்பும் நிகழ்ச்சி

பாரிமன்னர் வேட்டைக்கு சென்று திரும்பும் நிகழ்ச்சி நடந்தது

Update: 2023-04-30 18:45 GMT

சிங்கம்புணரி

சிங்கம்புணரி அருகே கடை ஏழு வள்ளல்களில் ஒருவரான பாரி மன்னன் ஆண்ட பகுதியான திருக்கைலாய பரம்பரை திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி தேவஸ்தானத்திற்குட்பட்ட பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 24-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டகப்படிதாரர்கள் சார்பிலும் சிறப்பு பூஜை நடைபெற்று இரவில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலாவரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வாக திருக்கல்யாணம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தொடர்ந்து மன்னர் வள்ளல் பாரி சிலை வைத்து வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. முல்லைக்கு தேர் கொடுத்த வள்ளல் பாரி நினைவாக 7-ம் நாள் திருவிழா வள்ளல் பாரி விழாவாக கொண்டாடப்படுகிறது. முன்னதாக தேரில் வள்ளல் பாரி மன்னர் வேட்டைக்கு சென்று திரும்பும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு பொன்னம்பல அடிகளார் தலைமை தாங்கினார். அவருக்கு கோவில் முதல் ஸ்தானிகர் உமாபதி சிவாச்சாரியார் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம அருணகிரி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் முல்லைக்கு தேர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி வள்ளல் பாரி சிலைக்கு பொன்னம்பல அடிகளார் பட்டாடை சாற்றினார். முல்லைக்கொடியை எடுத்து பொன்னம்பல அடிகளார் தேரில் எடுத்து வைத்தார். பின்னர் சகல ஜீவராசிகளுக்கும் படியழக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவில் பேஸ்கர் கேசவன், ஸ்தானிகர் கற்பூர சொக்கலிங்கம், பிரான்மலை வனக்குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்