கண்களில் கருப்புத் துணியை கட்டி பேராசிரியர்கள் போராட்டம்
பதிவாளர் பணி நீட்டிப்பை ரத்து செய்ய கோரி காந்திகிராம பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் கண்களில் கருப்புத் துணியை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
பேராசிரியர்கள் போராட்டம்
திண்டுக்கல் அருகே காந்திகிராம பல்கலைக் கழகம் உள்ளது. இந்த பல்கலைக் கழகத்தில் பதிவாளராக உள்ள சிவக்குமாருக்கு 2-வது முறையாக பணி நீட்டிப்பு வழங்கியதை ரத்து செய்ய வேண்டும். உடனடியாக முழு நேர பதிவாளரை நியமிக்க வேண்டும்.
கடந்த 2 ஆண்டுகளாக பல்கலைக் கழகத்தில் துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது. இதற்கு முழு நேர துணைவேந்தரை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் சங்கத்தின் சார்பில் பேராசிரியர்கள் பல்வேறு நுதன போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கண்களில் கருப்புத் துணி...
இந்த நிலையில் நேற்று பல்கலைக்கழக பெல் மைதானத்துக்கு பேராசிரியர்கள் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வாயிலும், கண்ணிலும் கருப்பு துணியை கட்டிக்கொண்டு, கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பல்கலைக்கழக மூத்த பேராசிரியர் ஆனந்தகுமார் பேசுகையில், போராட்டத்துக்கு பேராசிரியர்களை தள்ளப்பட்டதற்கான காரணத்தையும், கடந்த 5 ஆண்டுகளாக பல்கலைக்கழகம் தற்போது உள்ள பதிவாளரால் பின்னடைவை சந்தித்து வருவதை விளக்கி பேசினார். இதைத்தொடர்ந்து ஆசிரியர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் மணிவேல் பேசினார். முடிவில் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால், அடுத்த கட்டமாக அலுவலக பணியாளர்களுடன் இணைந்து திண்டுக்கல்-மதுரை 4 வழி சாலையில் போராட்டம் நடத்தப்படும் என்று போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.