தூத்துக்குடியில் கல்லூரி மாணவர் மீது பேராசிரியர்கள் தாக்குதல்

தூத்துக்குடியில் கல்லூரி மாணவர் மீது பேராசிரியர்கள் தாக்குதல் நடத்தினர். இதை கண்டித்து மாணவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-04-19 18:45 GMT

தூத்துக்குடியில் கல்லூரி பேராசிரியர்கள் தாக்கியதாக மாணவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதனைக்கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தாக்குதல்

தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் விஸ்காம் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நேற்று தேர்வு நடந்தது. அப்போது அந்த தேர்வு அறையில் இருந்த கரும்பலகையில், ஏற்கனவே பாடம் நடத்திய போது எழுதப்பட்ட விடைகள் இருந்ததாக கூறப்படுகிறது.

அதனை மாணவர்கள் பார்த்து எழுதியதாக கூறி, தேர்வு எழுதிய மாணவர்களை சஸ்பெண்டு செய்வதாக 2 பேராசிரியர்கள் தெரிவித்து உள்ளனர். அப்போது ஒரு மாணவர், பேராசிரியர்களிடம் விளக்கம் அளிக்க முற்பட்டுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பேராசிரியர்கள் அந்த மாணவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அந்த மாணவர் காயம் அடைந்தார். இதனை தொடர்ந்து சக மாணவர்கள், அந்த மாணவரை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து கல்லூரி முன்பு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.

ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில் மாணவர் மீது தாக்குதல் நடத்திய பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் கார்த்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சுரேஷ் ஆகியோர் தலைமை தாங்கினர். இந்திய மாணவர் சங்க நிர்வாகி கிஷோர் முன்னிலை வகித்தார். பேராசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

முடிவில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட துணை தலைவர் ஜேம்ஸ் நன்றி கூறினார்.

இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்