மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் 9-ம் ஆண்டு ஆடிப்பூர விழா நேற்று நாமக்கல்லில் நடந்தது. இதையொட்டி மத நல்லிணக்கம் பெருகவும், பருவமழை பெய்ய வேண்டியும், மக்கள் நலம் பெறவும் செவ்வாடை பக்தர்களின் கஞ்சிகலய ஊர்வலமும் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு நாமக்கல் மாவட்ட ஆன்மிக இயக்க தலைவர் கணேசன் தலைமை தாங்கி, ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
நாமக்கல் தட்டாத்தெருவில் தொடங்கிய கஞ்சி கலய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று, ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தை அடைந்தது. இதில் ஆண்கள், பெண்கள் என ஏராளமான செவ்வாடை பக்தர்கள் கஞ்சிக்கலயம், முளைப்பாரி, அக்னி சட்டி எடுத்துக்கொண்டு ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது.