கிருஷ்ணகிரியில்தமிழ்நாடு தின ஊர்வலம்-புகைப்பட கண்காட்சிகலெக்டர் தொடங்கி வைத்தார்

Update: 2023-07-18 19:45 GMT

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு தின ஊர்வலம் மற்றும் புகைப்பட கண்காட்சியை கலெக்டர் சரயு தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு தினம்

தமிழ்நாடு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கிருஷ்ணகிரி தாலுகா அலுவலக வளாகத்தில், பள்ளி மாணவ, மாணவிகள் பங்கு பெற்ற ஊர்வலம் நடந்தது. இந்த மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தமிழ்நாடு நாள் முக்கியத்துவம் குறித்து அமைக்கப்பட்ட சிறப்பு புகைப்பட கண்காட்சி நடந்தது. இதை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

பின்னர் கலெக்டர் சரயு பேசியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் கடந்த 30.10.2021 அன்று அண்ணாவால் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டிய ஜூலை 18-ம் நாளை பெருமைப்படுத்தும் விதமாக, ஆண்டுதோறும் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என அறிவித்தார். அதன் அடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்டது. கிருஷ்ணகிரி தாலுகா அலுவலக வளாகத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற ஊர்வலம் நடந்தது.

குறும்படம் ஒளிபரப்பு

இந்த ஊர்வலம் பழைய பெங்களூரு சாலை வழியாக மாங்கனி கண்காட்சி வளாகத்தில் முடிவடைந்தது. தொடர்ந்து, கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்று வரும் 29-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியில் சிறப்பு புகைப்பட கண்காட்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்பட கண்காட்சி வருகிற 23-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

மேலும், அதிநவீன எல்.இ.டி. வீடியோ வாகனத்தின் மூலம் தமிழ்நாடு நாள் குறித்த குறும்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. தமிழ்நாடு நாள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஆட்டோ மூலம் பிரசாரம் செய்யப்பட்டது. எனவே, பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தமிழ்நாடு நாள் உருவான வரலாறு குறித்து அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை கண்டுகளிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர், உதவி கலெக்டர் பாபு, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் விவேகானந்தன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், நகராட்சி தலைவர் பரிதா நவாப், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சீனிவாசன், துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழரசி, கிருஷ்ணகிரி தாசில்தார் சம்பத், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நவாப், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மகேந்திரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்