நாகூர் துறைமுகத்தில் மீன் விற்பனை செய்வதில் பிரச்சனை - மீனவர்கள் தீக்குளிக்க முயற்சி
நாகூர் துறைமுகத்தில் மீன் விற்பனை செய்வது தொடர்பாக எழுந்த பிரச்சனையில் மீனவர்கள் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.;
நாகப்பட்டினம்,
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து இன்று மீனவர்கள் மீன்களை பிடித்து கொண்டு விற்பனை செய்வதற்காக நாகூர் துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர்.அப்போது நாகூர் துறைமுகத்தில் மீன்களை விற்பனை செய்வது தொடர்பாக மேலபட்டினச்சேரி மற்றும் கீழப்பட்டினச்சேரி மீனவர்களுக்கு இடையே தொடர்பாக பிரச்சினை எழுந்துள்ளது.
இதனால் ஆவேசமடைந்த மேலபட்டினச்சேரி மீனவர்கள் இன்று திடீரென நாகூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிடித்து வந்த மீன்களை விற்பனை செய்ய முடியாததால் ஆத்திரமடைந்து அவர்கள் அந்த மீன்களை சாலையில் கொட்டி துறைமுகத்தில் மீன் விற்க தங்களுக்கு உரிமை வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.
மீனவர்களின் சாலை மறியல் போராட்டத்தால் நாகூர் காரைக்கால் தேசிய நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த டிஎஸ்பி சரவணன், நாகூர் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் ஆகியோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது போலீசாருக்கும் மீனவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. அப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட மீனவர்கள் திடீரென டீசலை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
அதனைத் தொடர்ந்து நாகூர் மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை இணை இயக்குனர் ஜெயராஜ் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உறுதியளித்ததை தொடர்ந்து மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.
அரசால் கட்டப்பட்ட மீன்பிடி துறைமுகத்தில் தங்களுக்கு சம உரிமை வழங்கி மீன்களை எந்த ஒரு பிரச்சனையுமின்றி விற்பனை செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகூர் மேலப்பட்டினச்சேரி மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அதனை தொடர்ந்து மேலபட்டினச்சேரி மீனவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகள் முன்னிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நாகூர் துறைமுகத்தில் மீன் விற்பனை மற்றும் ஏலத்தை தொடங்கினார்கள். தொடர்ந்து நாகூர் துறைமுகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.