வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு
திண்டுக்கல்லில் நடந்த மாவட்ட அளவிலான டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
14 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி, திண்டுக்கல் ஓம் சாந்தி பள்ளி மைதானத்தில் நடந்தது. இதில் பெண்கள் பிரிவில் 4, ஆண்கள் பிரிவில் 9 அணிகள் என மொத்தம் 13 பள்ளி அணிகள் பங்கேற்று விளையாடின. போட்டிகள் நாக் அவுட் சுற்று அடிப்படையில் நடந்தது. இதையொட்டி நேற்று அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி நடந்தது. ஆண்கள் பிரிவிற்கான இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அக் ஷயா ஓம் சாந்தி மேல்நிலைப்பள்ளி அணி 4 ஓவர்களில் 32 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய திண்டுக்கல் ஹோலிகிராஸ் மெட்ரிக் பள்ளி அணி 4 ஓவர்களில் 31 ரன்கள் எடுத்து 1 ரன் வித்தியாசத்தில் தோற்றது.
நவாமரத்துப்பட்டி விவேகானந்தா பள்ளி அணி 3-வது இடம் பிடித்தது. இதேபோன்று பெண்களுக்கான பிரிவில் எஸ்.பி.எம். பள்ளி அணி சாம்பியன் கோப்பை வென்றது. மாரம்பாடி லிட்டில் பிளவர் பள்ளி அணி 2-வது இடம் பிடித்தது. பின்னர் நடந்த பரிசு வழங்கும் நிகழ்ச்சியில், வெற்றிபெற்ற அணிகளுக்கு மாவட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்க தலைவர் வாஞ்சிநாதன், ஓம்சாந்தி பள்ளி முதல்வர் ரம்யா ஆகியோர் பரிசுக்கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கினர். போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்க செயலாளர் வெங்கடேஷ் உள்பட நிர்வாகிகள் செய்திருந்தனர்.