செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய அணிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு: முதல்-அமைச்சர் வழங்கினார்
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பதக்கம் வென்ற 2 இந்திய அணிகளுக்கும் தலா ரூ.1 கோடி பரிசை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை,
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்தது. இதில் 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியின் நிறைவு விழா நேற்றுமுன்தினம் நடந்தது. இதில் பொதுப்பிரிவில் இந்திய 'பி' அணியும், பெண்கள் பிரிவில் இந்திய 'ஏ' அணியும் வெற்றி பெற்றன.
வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்த இந்த 2 அணிகளின் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன. அந்த வகையில் வெற்றி வாகை சூடிய 2 இந்திய அணிகளுக்கும் பரிசுத்தொகை வழங்குவதாக தமிழக அரசு அறிவித்து இருக்கிறது.
இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
ரூ.1 கோடி பரிசு
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டிகளை உலகமே பாராட்டும் வகையில் வெற்றிகரமாக தமிழ்நாடு அரசு நடத்தி முடித்துள்ளது. இந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டில் பொதுப்பிரிவில் இந்திய 'பி' அணியும், பெண்கள் பிரிவில் இந்திய 'ஏ' அணியும் என பதக்கம் வென்று செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்த்திருப்பது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
இதில் பொதுப்பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய பி அணிக்கும், பெண்கள் பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய ஏ அணிக்கும் (பெண்கள்) பரிசுத்தொகையாக தலா ரூ.1 கோடி வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பிக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பரிசுத்தொகை வழங்கினார்
இந்த அறிவிப்பை தொடர்ந்து 2 அணி வீரர்களையும் நேற்று நேரில் சந்தித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தலா ரூ.1 கோடி பரிசுத்தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.
அப்போது விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், தலைமைச்செயலாளர் இறையன்பு, விளையாட்டு மேம்பாட்டுத்துறை முதன்மை செயலாளர் அபூர்வா, செஸ் ஒலிம்பியாட் சிறப்பு பணி அலுவலர் தாரேஸ் அகமது, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை செயல் அலுவலர் மற்றும் உறுப்பினர் செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர்.