அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பரிசு

குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களில் தங்கி படித்து அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பரிசை கலெக்டர் வழங்கினார்.

Update: 2023-06-09 18:45 GMT

விழுப்புரம்:

சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் செயல்படும் விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் 18 வயதிற்கு கீழ் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு இளைஞர் நீதி சட்டம் (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) பிரிவின் கீழ் பதிவு பெற்று 5 குழந்தைகள் இல்லங்கள் செயல்படுகின்றன. இந்த இல்லங்களில் 113 பேர் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இதில் 3 இல்லங்களில் தங்கி படித்து 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்ற 19 மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு ரூ.10,232 மதிப்பிலான புத்தகப்பைகளை கலெக்டர் பழனி வழங்கி பாராட்டினார். அப்போது, 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளிடம் உயர்கல்வியை தொடர்ந்து படிக்க வேண்டும். தங்கள் உயர்கல்விக்கு அரசால் வழங்கப்படும் இடஒதுக்கீடு மற்றும் மாதந்தோறும் வழங்கப்படும் ஊக்கத்தொகை குறித்து எடுத்துரைத்ததுடன் பெண் பிள்ளைகள் கல்வி பயின்றால்தான் சமூகம் முன்னேற்றம் காணும். எனவே, நீங்கள் அனைவரும் உயர்கல்வியை நல்ல முறையில் படித்து உயர்ந்த நிலையை அடைந்திட வேண்டும் என்று அறிவுறுத்தினார். தொடர்ந்து, குழந்தைகள் இல்லத்தின் 3 நிர்வாகிகளை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுக்கு கேடயத்தை பரிசாக வழங்கினார். அப்போது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பார்கவி, பாதுகாப்பு அலுவலர் கிருஷ்ணகுமாரி உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்