கோவை-சீரடி இடையே தனியார் ரெயில் சேவை இன்று முதல் தொடங்குகிறது
கோவை-சீரடி இடையே இயக்கப்படும் தனியார் ரெயில் சேவை இன்று முதல் தொடங்குகிறது.
கோவை,
இந்தியாவிலேயே முதல் முறையாக தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு, கோவையில் இருந்து சீரடிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் இன்று (செவ்வாய்க்கிழமை) கோவையில் இருந்து முதல் பயணத்தை தொடங்க உள்ளது. வாரம் ஒரு முறை செல்லும் இந்த ரெயிலில் டிக்கெட் முதல் பராமரிப்பு பணிகள் வரை தனியார் நிறுவனமே மேற்கொள்ள உள்ளது. பிரதமர் மோடியின் பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ் தனியார் வசம் கொடுக்கப்பட்டுள்ள ரெயிலில் உள்கட்டமைப்பு வடிவங்களை தனியார் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. அதற்காக போத்தனூர் ரெயில் நிலையத்தில் இந்த ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் ஆய்வு
இந்த பணிகளை தென்னக ரெயில்வே பொது மேலாளர் பி.ஜி.மல்யா, சேலம் கோட்ட மேலாளர் கவுதம் சீனிவாசன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
தனியார் வசம் கொடுக்கப்படும் ரெயிலில் பயணிகளுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தனர். குறிப்பாக பயணிகளுக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், உணவு வசதிகள், செல்போன் சார்ஜ், மற்றும் பயணிகளுக்கு வழங்கப்படும் படுக்கை, போர்வை, உள்ளிட்ட பொருட்கள் ஆகியவற்றையும் ஆய்வு செய்தனர்.
ரெயில்வே துறை சேவைகளை தனியார் வசம் ஒப்படைக்க தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் எம்.பி.க்கள் மத்தியில் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், இன்று முதல் தனியார் ரெயில் சேவை கோவையில் இருந்து தொடங்குவது குறிப்பிடத்தக்கது.