26-ந் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 26-ந் தேதி நடக்கிறது.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பாக கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் 100 சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. அதனைத்தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 26-ந் தேதி (சனிக்கிழமை) புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை கல்லூரியில் நடைபெற உள்ளது. இம்முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத்துறை போன்ற பல்வேறு துறைகளை சார்ந்த 150-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர். அயல்நாட்டு வேலைவாய்ப்பிற்கான பதிவு வழிகாட்டல், சுயதொழில், வங்கி கடன் உதவிகள் மற்றும் அரசின் திட்டங்கள் குறித்து பிரத்யேக அரங்கம் அமைத்து ஆலோசனை அளிக்கப்பட உள்ளது. 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ, பி.இ., நர்சிங் படிப்புகள் போன்ற கல்வித்தகுதியுடைய 18 முதல் 40 வயதிற்குட்பட்ட வேலைநாடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களும் தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொள்ளலாம். மேலும், www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம். புதுக்கோட்டை மாவட்ட இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.