அரசு வேலை வாங்கி தருவதாக 20 பேரிடம் ரூ.1.54 கோடி மோசடி- தனியார் பள்ளி ஆசிரியர் கைது

அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி 20 பேரிடம் ரூ.1 கோடியே 54 லட்சம் மோசடி செய்த தனியார் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-09-20 18:45 GMT

பாவூர்சத்திரம்:

அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி 20 பேரிடம் ரூ.1 கோடியே 54 லட்சம் மோசடி செய்த தனியார் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

பாவூர்சத்திரத்தில் நடந்த இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

தனியார் பள்ளி ஆசிரியர்

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூரில் வசித்து வருபவர் செல்வராஜ் மகன் பொன்ராஜ் (வயது 37). டிப்ளமோ (சிவில்) படிப்பு முடித்துள்ளார். இவர் கடந்த 2013-2014, 2014-2015-ம் ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தின் குரூப்-4 பிரிவுக்கான தேர்வை எழுதி அரசு வேலைக்காக காத்திருந்தார்.

அப்போது பொன்ராஜின் நண்பர் ஒருவர், ஆவுடையானூரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிவரும் வாடியூரைச் சேர்ந்த ஆசிரியர் வியாகப்பன் (51) மற்றும் அவருடைய தம்பி ஜெயபால் ஆகிய இரண்டு பேரையும் பொன்ராஜிக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

ரூ.1.54 கோடி

அப்போது வியாகப்பன், தனது நண்பர் ஒருவர் அரசு வேலை வாங்கி கொடுத்து வருவதாக பொன்ராஜிடம் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய பொன்ராஜ் தன்னுடன் ஒரே பயிற்சி மையத்தில் படித்து அரசு வேலைக்காக காத்திருந்த கீழப்பாவூர், மடத்தூர், கல்லூரணி, சுரண்டை, ஆலங்குளம், ராஜபாண்டி உள்ளிட்ட பல ஊர்களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ேடாருடன் சென்று ஆசிரியர் வியாகப்பனை நேரில் சந்தித்தார்.

அப்போது ஆசிரியர் வியாகப்பன், அனைவருக்கும் அரசு வேலை வாங்கி தருவதாகவும், அதற்காக ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்சம் ரூ.15 லட்சம் செலவாகும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் பணத்தை தனது நண்பரான அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடியை சேர்ந்த ஜான் தேவபிரியம் என்பவரிடம் கொடுத்து வேலை வாங்கி தருவதாக உறுதி அளித்தார்.

இதனை நம்பிய 20 பேர் தலா ரூ.2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை மொத்தம் ரூ.1 கோடியே 54 லட்சம் வரை கொடுத்துள்ளனர்.

போலி நியமன ஆணை

இதன்பின்னர் ஆசிரியர் வியாகப்பன், அவரது தம்பி ஜெயபால், நண்பர் ஜான் தேவபிரியம் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து பல்வேறு அரசு துறை பணிகளுக்கான உத்தரவுகளை போலியாக தயார் செய்து வழங்கி உள்ளனர். அந்த பணி நியமன ஆணைகள் போலியானது என தெரிய வந்ததும் பணம் கொடுத்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் பணத்தை திருப்பி கேட்டபோது கொடுக்கவில்லை. இதனால் தாங்கள் மோசடி செய்யப்பட்டதை அறிந்தனர். இதைத்தொடர்ந்து இவர்கள் கடந்த 2021 ஆண்டு தென்காசி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

கைது

கோர்ட்டு உத்தரவின்படி பாவூர்சத்திரம் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஆசிரியர் வியாகப்பனை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் பாவூர்சத்திரம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுதந்திராதேவி நேற்று ஆசிரியர் வியாகப்பனை கைது செய்து விசாரணை நடத்தி, தென்காசி கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்.

இந்த மோசடி சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.


Tags:    

மேலும் செய்திகள்