தமிழக அரசின் சார்பில் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைதேடும் இளைஞர்களுக்காக ஒவ்வொரு மாதமும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இம்முகாமில் தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வு செய்து கொள்ளலாம். அதேபோல இம்முகாமில் 10-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை முடித்தவர்கள், ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் கலந்துகொண்டு தங்களது தகுதிக்கேற்ப தனியார்துறை நிறுவனங்களில் பணிநியமனம் பெறலாம்.
முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களின் சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பம், அனைத்து அசல் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் புகைப்படத்துடன் நாளை(வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து கலந்து கொண்டு வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறலாம். இதனால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. தமிழக அரசால் தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள சேவை வழங்கப்படுகிறது. இதில் பதிவு செய்து தனியார் துறை நிறுவனங்களும் வேலைதேடும் இளைஞர்களும் பயன்பெறலாம் என ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.