திருட்டு போன சிலைகளை கண்டுபிடிக்க தனிப்படை அமைப்பு
தண்டராம்பட்டு அருகே பழமை வாய்ந்த 10 ஐம்பொன் சிலைகள் திருடப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்கவும், சிலைகளை கண்டுபிடிக்கவும் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
தண்டராம்பட்டு
தண்டராம்பட்டு அருகே பழமை வாய்ந்த 10 ஐம்பொன் சிலைகள் திருடப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்கவும், சிலைகளை கண்டுபிடிக்கவும் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
10 ஐம்பொன் சிலைகள் திருட்டு
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி அருகே மலமஞ்சனூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த மலை கிராமத்தையொட்டி குருமன்ஸ் பழங்குடியின மக்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.
இவர்களின் குலதெய்வமான வீரபத்திர சாமிக்கு 3 ஆண்டுக்கு ஒருமுறை அங்குள்ள மலை உச்சியில் விழா எடுப்பது வழக்கம்.
இந்த விழாவிற்கான சாமி சிலைகள் பாறை குகையில் பத்திரமாக வைக்கப்பட்டிருக்கும். விழாவிற்கு பயன்படுத்தப்படும் சிவன், பார்வதி, வீரபத்திர சாமி உள்ளிட்ட 10 சாமி சிலைகள் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐம்பொன் சிலைகளாகும்.
இந்த சாமி சிலைகளை கடந்த 2 நாட்களுக்கு முன்பு பவுர்ணமியை முன்னிட்டு விழா எடுப்பதற்காக குகைக்கு கோவில் பூசாரி ஆவுடையப்பன்சென்று பார்த்த போது அங்கு சிலைகள் திருடப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் தானிப்பாடி போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனிப்படை அமைப்பு
இந்த நிலையில் இன்று கிராமிய துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர் தனலட்சுமி சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துக்குமாரசாமி, உதயசூரியன், முரளிதரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
சிலை வைக்கப்பட்டிருந்த பாறை குகையையும் பார்வையிட்டனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு விழா எடுக்கப்பட்டது. அதன் பின்பு யாரும் அந்த குகைக்குள் செல்லாததால் இந்த சிலைகள் எப்போது திருட்டு போனது என்று தெரியவில்லை.
எனவே சிலையை திருடியவர்களை கண்டுபிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலையின் விலை மதிப்பு, வரலாறு தெரிந்தவர்கள் தான் இந்த சிலை கடத்தலை செய்திருக்க முடியும் என்று போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். சிலைகள் குறித்து வரலாற்று ஆதாரங்களை சேகரித்த இவர்கள் சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதை தடுக்க உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
3-வது முறை திருட்டு
இதற்கு முன்பு இதேபோல இந்த சிலைகளை திருட முயன்ற திருடர்கள் சிலை எடுத்துக் கொண்டு வெளியே வரும்போது அவர்கள் கண்பார்வை இழந்ததாகவும் அதனால் அந்த சிலைகளை அங்கேயே போட்டுவிட்டு சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது
மற்றொரு முறை இந்த சிலையை திருடிய கும்பல் அங்கிருந்து சிலையை எடுத்துச் செல்ல முடியாமல் அருகில் உள்ள தண்ணீர் இல்லாத குளத்தில் போட்டுவிட்டு தப்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது 3-வது முறையாக சிலை திருட்டு நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.