தனியார் நிறுவன ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

பழனி முருகன் கோவிலில் தனியார் நிறுவன ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-06-06 19:30 GMT

தனியார் நிறுவன ஊழியர்கள்

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக விளங்கி வரும் பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்புக்காக, கூட்டத்தை கட்டுப்படுத்தி தரிசனம் செய்யும் வகையில் காவலர்களை பணி அமர்த்துவதற்கு திருச்சியை சேர்ந்த தனியார் நிறுவனத்துடன் கோவில் நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த நிறுவனத்தின் மூலம் 150 ஊழியர்கள் பழனி கோவில், ரோப்கார், மின்இழுவை ெரயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பணி புறக்கணிப்பு போராட்டம்

இந்நிலையில் நேற்று பழனி முருகன் கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் தனியார் நிறுவன ஊழியர்கள் பணியை புறக்கணித்தனர். பின்னர் அவர்கள் கோவில் தலைமை அலுவலகத்துக்கு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கோவில் அலுவலகத்தில் மனு ஒன்றை கொடுத்தனர்.

அதில் தனியார் நிறுவனத்தின் கீழ் கடந்த 11 மாதங்களாக பணிபுரிந்து வருகிறோம். மாதம் ரூ.8,500 சம்பளம் வழங்குகின்றனர் தற்போது மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. மேலும் எங்களிடம் பெறப்பட்ட டெபாசிட் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். சம்பளத்தை மாதம் 3-ந்தேதி முதல் 6-ந்தேதிக்குள் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர். இதனைத் தொடர்ந்து கோவில் அதிகாரி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்