தனியார் வேலைவாய்ப்பு முகாம்- கலெக்டர் தொடங்கி வைத்தார்
திருவள்ளூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாமை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.
திருவள்ளூரில் நேற்று தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பாக நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார். இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தேர்வு செய்யப்பட்ட பணியாளர்களுக்கு கலெக்டர் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இதையடுத்து கலெக்டர் பேசும்போது திருவள்ளூர் மாவட்டத்தில் 2022-2023 ஆம் ஆண்டில் படித்து வேலைவாய்ப்பற்ற ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் ஆகியோர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்திடும் வகையில் நடத்தப்படும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு வகையான வேலை வாய்ப்புகள் வழங்கக்கூடிய முன்னணி தனியார் தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க முன் வந்துள்ளனர்.
அரசுத் துறைகளில் பணிகள் நியமனம் பெற இளைய சமுதாயத்தினரை போட்டி தேர்வுகளுக்கு தயார்படுத்தும் வகுப்புகள் ஒரு பக்கம் நடத்தப்பட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் தனியார் துறைகளில் வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள ஏதுவாக இதுபோன்ற பெரிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்களும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் நடைபெற்று வருகின்றன என்றார். இந்த முகாமில் இளைஞர்கள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பல்வேறு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.