தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 80 பவுன் நகை, 1½ கிலோ வெள்ளி கொள்ளை

நாகர்கோவிலில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 80 பவுன் நகை மற்றும் 1½ கிலோ வெள்ளியை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2022-06-26 20:43 GMT

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 80 பவுன் நகை மற்றும் 1½ கிலோ வெள்ளியை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தனியார் நிறுவன மேலாளர்

நாகர்கோவில் வடலிவிளை தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ஆன்டேஷ்வரன் (வயது 47), நெல்லை மாவட்டம் செட்டிகுளத்தில் உள்ள ஒரு தனியார் மணல் ஆலையில் மேலாளராக உள்ளார். இவருக்கு பிரேமா என்ற மனைவியும், 2 மகன்களும் உண்டு. மூத்த மகன் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். எனவே மகனை பார்ப்பதற்காக ஆன்டேஷ்வரன் குடும்பத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை சென்னைக்கு சென்றார்.

இந்த நிலையில் ஆன்டேஷ்வரன் வளர்த்து வரும் நாய்க்கு உணவு வைப்பதற்காக நேற்று இரவு வேலைக்கார பெண் வந்தார். அப்போது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். நேற்று முன்தினம் இரவில் யாரோ மர்ம நபர்கள் கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்தது தெரியவந்தது.

பீரோ உடைப்பு

இதனால் அதிர்ச்சி அடைந்த வேலைக்கார பெண் உடனே கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராமர் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் பின்புற கதவு வழியாக உள்ளே சென்று பார்வையிட்டனர். அப்போது வீட்டில் இருந்த பீரோ, லாக்கர் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவில் வைத்திருந்த நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்தது.

இதுபற்றி போலீசாரிடம் கேட்டபோது, "ஆன்டேஷ்வரனிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவரது வீட்டில் 80 பவுன் நகை மற்றும் 1½ கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போனதாக தெரிவித்து இருக்கிறார். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றனர்.

போலீசார் சந்தேகம்

முன்னதாக கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்து மர்ம நபர்களின் ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. ஆன்டேஷ்வரன் வாரம் வாரம் விடுமுறை தினத்தன்று மகனை பார்ப்பதற்காக சென்னைக்கு குடும்பத்துடன் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இதை நன்கு அறிந்த மர்ம நபர்கள் தான் இந்த கொள்ளையில் ஈடுபட்டு இருக்க கூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் ஆன்டேஷ்வரன் வீட்டில் கண்காணிப்பு கேமரா உள்ளது. ஆனால் அது பயன்பாட்டில் இருந்ததா? என்று தெரியவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்