தனியார் நிறுவன ஊழியர் பலி
வடமதுரை அருகே மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.;
வடமதுரை அருகே உள்ள வாலிசெட்டியபட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 25). இவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி ஊருக்கு வந்திருந்தார். அன்று நாகையகோட்டையில் உள்ள தனது அக்காள் காளீஸ்வரி என்பவரை பார்ப்பதற்காக ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றார். வடமதுரை எரியோடு சாலையில் கெச்சானிபட்டி அருகே மோட்டார் சைக்கிள் சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர புளிய மரத்தின் மீது மோதியது. இதில் கீழே விழுந்த ராஜேந்திரன் படுகாயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.