தனியார் நிறுவனங்கள் ராக்கெட், சாட்டிலைட் உருவாக்க விண்ணப்பம்: முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன்
தனியார் நிறுவனங்கள் ராக்கெட், சாட்டிலைட் உருவாக்க விண்ணப்பம் செய்வதாக, முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.
இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, இந்தியாவில் தனியார் நிறுவனத்தின் ராக்கெட் ஏவப்பட்டு உள்ளது. இது மகிழ்ச்சியாக உள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மென்மேலும் பல பெரிய ராக்கெட்டுகள் விட வேண்டும். தற்போது விண்வெளி நடவடிக்கையாக ராக்கெட் உருவாக்கவும், சாட்டிலைட் உருவாக்கவும் விண்ணப்பித்து வருகின்றனர். சந்திராயன் அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் கூறி உள்ளார். குலசேகரன்பட்டினத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி முழுமையாக முடிந்து விட்டது. அங்கு ராக்கெட் தளம் அமைப்பதற்கான வடிவமைப்பு பணிகள் நடந்து வருகிறது. தொடர்ந்து மண் பரிசோதனைகள் முடிவடைந்தபிறகு கட்டுமான பணிகள் தொடங்க உள்ளனர் என்று கூறினார்.