தந்தை இறந்த துக்கம் தாளாமல் சோக முடிவு:தனியார் செல்போன் நிறுவன மேலாளர் தற்கொலை

பொள்ளாச்சி அருகே தந்தை இறந்த துக்கம் தாளாமல் தனியார் செல்போன் நிறுவன மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-06-13 19:00 GMT

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே தந்தை இறந்த துக்கம் தாளாமல் தனியார் செல்போன் நிறுவன மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தனியார் செல்போன் நிறுவன மேலாளர்

பொள்ளாச்சி அருகே உள்ள குள்ளக்காபாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ். இவரது மகன் முருகேசன் (வயது 24). இவர் ஒரு தனியார் செல்போன் நிறுவனத்தில் பகுதி மேலாளராக பணிபுரிந்து வந்தார். இதற்கிடையே கடந்த 10 மாதங்களுக்கு முன் அவரது தந்தை கிருஷ்ணராஜ் இறந்து விட்டார். தந்தை இறந்த துக்கத்தில் முருகேசன் இருந்து வந்தார். இதனால் அவர், யாரிடமும் சகஜமாக பேசாமல் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் வீட்டில் அவரது தாய் பஞ்சவர்ணம் மற்றும் தம்பி ஒரு அறையிலும், மற்றொரு அறையில் முருகேசனும் படுத்து தூங்கி உள்ளனர். தொடர்ந்து இரவில் தாய் எழுந்து வந்து பார்த்த போது, மற்றொரு அறையில் இருந்த முருகேசன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து பொள்ளாச்சி தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், தந்தை இறந்த துக்கம் தாளாமல் முருகேசன் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்