கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு தனியார் பஸ்கள் ஓடவில்லை

அண்டை மாநிலமான புதுச்சேரியில் நடந்த முழு அடைப்பு போராட்டம் எதிரொலியாக கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு தனியார் பஸ்கள் ஓடவில்லை. ஆனால் அரசு பஸ்கள் வழக்கம் போல் இயங்கின.

Update: 2022-09-27 18:45 GMT

கடலூர்:

இந்து மதத்தையும், இந்து பெண்களையும் இழிவுபடுத்தி பேசியதாக கூறி, தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவுக்கு பாரதீய ஜனதா கட்சி, இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அவரை கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. அந்த வகையில் புதுச்சேரி மாநிலத்தில் நேற்று ஒரு நாள் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் அங்கு பஸ்கள் ஓடவில்லை. கடைகள் அனைத்தும் அடைத்து கிடந்தன.

தனியார் பஸ்கள் ஓடவில்லை

இதனால் கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும் தனியார் பஸ்கள் ஓடவில்லை. கடலூர் மாவட்டத்தில் இருந்து நாள்தோறும் வேலை நிமித்தமாகவும், ஆஸ்பத்திரிக்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் புதுச்சேரிக்கு சென்று வருகின்றனர். அவர்கள் தனியார் பஸ்கள் ஓடாததால் சிரமப்பட்டனர். இருப்பினும் வழக்கம் போல் அரசு பஸ்கள் புதுச்சேரி வழியாக இயக்கப்பட்டன. அதில் பயணிகள் ஏறி சென்றனர். இந்த அரசு பஸ்களில் வழக்கத்தை விட கூட்டமாக இருந்தது.

அரசு பஸ்கள் இயக்கம்

இது தவிர ஆட்டோக்கள் புதுச்சேரி எல்லை வரை இயக்கப்பட்டன. அதிலும் காலையில் வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவர்களும் கூட்டம், கூட்டமாக ஏறி சென்றதை பார்க்க முடிந்தது. இது பற்றி அரசு போக்கு வரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடந்தாலும் கடலூர் மாவட்டத்தில் இருந்து அரசு பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. எவ்வித தடையும் இல்லை என்றார்.

இது பற்றி தனியார் பஸ் உரிமையாளர் ஒருவர் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் இருந்து நாள்தோறும் 50-க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் புதுச்சேரிக்கு சென்று வந்தன. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று (நேற்று) எந்த பஸ்களும் இயக்கப்படவில்லை என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்