விக்கிரவாண்டியில் லாரி மோதி தனியார் பஸ் டிரைவர் சாவு மற்றொருவர் படுகாயம்
விக்கிரவாண்டியில் லாரி மோதி தனியார் பஸ் டிரைவர் உயரிழந்தார். படுகாயமடைந்த மற்றொருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி அடுத்த மேலக்கொந்தை கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 42). தனியார் பஸ் டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளில், திருக்கனூர் சென்றார். பின்னர் அங்கிருந்து மேலகொந்தை கிராமத்துக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது மாமா பாண்டுரங்கன் (59) என்பவரும் உடன்வந்தார்.
இவர்கள், ராதாபுரம் கருமார பேட்டை அருகே சென்ற போது எதிரே புதுச்சேரி நோக்கி வந்த மினி லாரி எதிர்பாராதவிதமாக, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், குமார் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
தீவிர சிகிச்சை
படுகாயமடைந்த பாண்டுரங்கனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதற்கிடையே விபத்து பற்றி அறிந்த விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வினாயக முருகன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்தில் இறந்த பஸ் டிரைவர் குமாருக்கு சிவகாமி (39) என்ற மனைவியும், யுவராஜ் (18), யுவனேஷ் (15) என்ற 2 மகன்களும் உள்ளனர்.