தனியார் பஸ் நிறுவனம் ரூ.500 கோடி மோசடி
தனியார் பஸ் நிறுவனம் ரூ.500 கோடி மோசடி செய்துள்ளது.
முதலீடு
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை பகுதியில் ஒரு தனியார் பஸ் நிறுவனம் செயல்பட்டு வந்தது. அதன் உரிமையாளர் பொதுமக்களிடம், தங்களது நிறுவனத்தில் இயங்கும் பஸ்கள் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களின் பெயரில் நிதி முதலீடு செய்தால் லாபத்தில் பங்கு தருவதாக அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து தஞ்சாவூர் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தலா ரூ.5 லட்சம் வீதம் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரத்துக்கும் அதிகமாக பங்குத்தொகை, அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
பங்குத்தொகை வழங்குவது நிறுத்தம்
10 ஆண்டுகளுக்கு மேலாக அந்த நிறுவனம், முதலீட்டாளர்களுக்கு லாபத்தில் பங்கு அளித்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், அந்த நிறுவனத்தின் உரிமையாளர் திடீரென இறந்து விட்டார். அதன் பின்னர் முதலீட்டாளர்களுக்கு லாபத்தில் பங்குத்தொகை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் ரூ.500 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்டதும், இதற்கிடையே முதலீடு செய்யப்பட்ட பஸ்களின் பெயரில் வங்கிகளில் கடன் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து முதலீட்டாளர்கள் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர்.
போலீசில் புகார்
இந்த சம்பவத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதாலும், புகாரில் குறிப்பிட்டுள்ள தொகை அதிகமாக இருப்பதாலும், இதுகுறித்து திருச்சி மன்னார்புரத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், திருச்சி மன்னார்புரம் பகுதியில் நேற்று காலை குவிந்தனர்.
அவர்கள் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி, பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துவிட்டு கலைந்து சென்றனர். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.