மதுரை மத்திய சிறையில் இருந்து கைதி தப்பி ஓட்டம்

மதுரை மத்திய சிறையில் இருந்து கைதி தப்பி ஓட்டம்

Update: 2022-06-16 19:52 GMT

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள தாமரைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ஆதி என்ற அருண்குமார்(வயது 46). இவர் மூதாட்டியை கொலை செய்த வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து வந்தார். அவருடைய நன்னடத்தை நடவடிக்கைகள் காரணமாக கடந்த சில மாதங்களாக சிறை வளாகத்தில் தோட்ட வேலைகள் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று மதியம் சிறை வளாகத்தினுள் உள்ள டி.ஐ.ஜி. வீட்டின் அருகே தோட்ட வேலையில் அருண்குமார் உள்ளிட்ட 10 பேர் ஈடுபட்டு கொண்டிருந்தனர். வேலை முடிந்து மாலை சிறைக்குச் செல்லும்போது 9 கைதிகள் மட்டும் சென்றுள்ளனர். அதில் அருண்குமாரை மட்டும் காணவில்லை. உடனே சிறை காவலர்கள் அவரை அங்குள்ள பகுதி முழுவதும் தேடிப் பார்த்தனர். ஆனால் அவர் எங்கும் கிடைக்காததால் அருண்குமார் தப்பி சென்றது தெரியவந்தது. உடனே இதுகுறித்து சிறை அதிகாரி தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் கரிமேடு போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் கைதி அருண்குமாரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

இதுகுறித்து போலீசாரிடம் விசாரித்தபோது, அருண்குமார் முதலில் கோவை மத்திய சிறை அடைக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் தனது ஊர் அருகே உள்ள மதுரை சிறைக்கு மாற்றும்படி விடுத்த வேண்டுகோளை ஏற்று மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார் என்றனர்.

மதுரை சிறையில் இருந்து கைதி தப்பித்த சம்பவம் சிறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்