புழல் ஜெயிலில் அளவுக்கு அதிகமான மாத்திரைகள் தின்று கைதி தற்கொலை - போக்சோ வழக்கில் சிறை சென்றவர்

போக்சோ வழக்கில் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டு தண்டனை பெற்று வந்த கைதி ஒருவர் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை தின்று தற்கொலை செய்தார்.;

Update:2022-12-31 12:04 IST

சென்னை கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 33). இவர் கடந்த செப்டம்பர் மாதம் போக்சோ வழக்கில் வண்ணாரப்பேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டு தண்டனை கைதியாக புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், சிறையில் இருந்த நாகராஜூக்கு உடலில் சொறி சிரங்கு ஏற்பட்டு நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக சிறையில் இருந்த ஆஸ்பத்திரியில் மாத்திரை, மாத்திரைகள் மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக தெரிகிறது.

இதற்கிடையே, நோயால் கடும் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று முன்தினம் இரவு திடீரென தனக்கு கொடுக்கப்பட்ட மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவரை அதிகாரிகள் உடனடியாக மீட்டு, சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜ் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்